மும்பை: ‘எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள்’ என ‘கொரோனா புகழ்’ நடிகர் சோனுசூட் அரசியல் கட்சிகள் குறித்து பரபரப்பு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, இரண்டு காரணங்களுக்காக பலர் அரசியலில் சேருகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காக… எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை என்று கூறி தற்கால அரசியல் களத்தை அதகளப்படுத்தி உள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊரை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பிரபலமானார் நடிகர் சோனுசூட். கொரோனா கால கட்டத்தில் ரயில், விமானம், பேருந்து என பல சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், மும்பையில் சிக்கி தவித்த தொழிலாள ஒருவருக்கு அவர் உதவி செய்த விவகாரம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மும்பையில் அப்போது ஆட்சி செய்து வந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசால் விமர்சிக்கப்பட்ட நிலையில், பின்னர், அப்போதைய முதல்வர் உத்தவை சோனு சூட் சந்தித்து விளக்கம் அளித்ததும் அனைவரும் அறிந்ததே.
கொரோனா காலக்கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் செய்ய தவறிய பல உதவிகளை நடிகர் சோனுசூட் செய்ததுட, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை ‘ரியல் ஹீரோ’ என மக்கள் கொண்டாடினர். மேலும் அவரது சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அவரை தங்களது கட்சிக்குள் இழுக்க பல கட்சிகள் போட்டோபோட்டி போட்டது. ஆனால், கழுவிய மீனில் நழுவிய மீனாக சோனுசூட், அரசியல் சாக்கடையில் விழாமல், தனது பணிகளை செவ்வனே செய்து வந்தார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனுசூட், எனக்கு முதல்வர் பதவியை, துணை முதல்வர் பதவ என பல பதவிகளை தருவதாக கூறினார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
“எனக்கு முதலில் முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது எனக்கு துணை முதல்வர், மாநிலங்களவை எம்.பி பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன் என்றவர், நான் அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன் என்றார்.
மேலும், மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் சேருகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காக… எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை.
அரசியலுக்கு வந்தால் எனக்கு டெல்லியில் வீடு, பதவி, உயர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆடம்பரங்கள் கிடைக்கும் என பலரும் தன்னிடம் கூறியுள்ளனர். அதை கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நான் இப்போது அதற்கு தயாராக இல்லை.
இப்போது எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார்.
நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.