இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை மன்மோகன் சிங், தனது 92வது வயதில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுத்துவந்த மன்மோகன் சிங் நேற்றிரவு நினைவிழந்ததை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மன்மோகன் சிங் உடல் டெல்லி மோதிலால் நேரு மார்க்-கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபின் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) சக்வால் மாவட்டத்தில் உள்ள கா என்ற கிராமத்தில் பிறந்தவரான மன்மோகன் சிங்-கிற்கு மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் உபிந்தர் சிங், அம்ரித் சிங் மற்றும் தமன் சிங் ஆகிய மூன்று மகள்கள்கள் உள்ளனர்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்த அவர் அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டிஃபில் படித்தார்.

அரசியலில் சேருவதற்கு முன், தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் போன்ற முக்கியப் பதவிகள் உட்பட அரசாங்கத்தில் பல முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்தார்.

1991 ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் அரசில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பொறுப்பேற்றபோது, ​​இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8.5 சதவீதத்திற்கு அருகில் இருந்தது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதம் 3.5 சதவீதமாக இருந்தது.

இது தவிர, அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு செலுத்த வேண்டிய அந்நியச் செலாவணி இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இருந்தது. பொருளாதாரம் மிகவும் மோசமான நெருக்கடியில் இருந்ததோடு. அன்றாட தேவைகளுக்கே அடுத்தவர் கைகளை எதிர்பார்க்க வேண்டிய சூழலில் இருந்தது.

அத்தகைய சூழ்நிலையில், டாக்டர் சிங் 1991-92 யூனியன் பட்ஜெட் மூலம் நாட்டில் ஒரு புதிய பொருளாதார சகாப்தத்தை தொடங்கினார். சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக இருந்தது, இதில் துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்கள், லைசன்ஸ் ராஜ் ஒழிப்பு மற்றும் பல துறைகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொருளாதாரத்தை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வருவதே நோக்கமாக இருந்தது.

அந்நிய நேரடி முதலீடு (FDI), ரூபாய் மதிப்புக் குறைப்பு, வரி குறைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் போன்றவற்றை அனுமதிப்பதன் மூலம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றிய விரிவான கொள்கையைத் தொடங்குவதில் அவரது பங்கு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரது கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் திசையில் கொண்டு செல்ல உதவியது.

1996 வரை நிதி அமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் தொடர் பொருளாதாக வளர்ச்சிக்கு வித்திட்டதை அடுத்து 2004 ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.

10 ஆண்டுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை வழிநடத்த அவர் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதன் அதிகபட்சமான ஒன்பது சதவீதத்தை எட்டியது மற்றும் உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது.

2005 இல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டத்தை (MNREGA) (100 நாள் வேலை திட்டம்) கொண்டு வந்ததன் மூலம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏழை எளியவர்களுக்கும் பணம் கையில் சென்று சேர வழி ஏற்படுத்தினார்.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் நாடு முழுவதும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டதோடு அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கான சம்பளத்தை வங்கிகள் மூலம் வழங்குவதை கட்டாயமாக்கினார்.

இது தவிர, நாடு முழுவதும் ரூ.76,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்தி கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெற பாடுபட்டார்.

2008 ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் போது அவர் நாட்டை வழிநடத்தினார் மற்றும் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு பெரிய ஊக்கப் பொதியை அறிவித்தார். இவருடைய பதவிக்காலத்தில்தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் ‘ஆதார்’ தொடங்கப்பட்டது.

இது தவிர, உணவு உரிமைச் சட்டம் மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் போன்ற பிற சீர்திருத்தங்களும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.