மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள லூப் ரோடு பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அமைக்கும் திட்டத்தைக் கண்டித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக மெரினா கடற்கரையை ஒட்டி காந்தி சிலை முதல் நொச்சிக்குப்பம் வரை பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மெரினா கடற்கரையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி சர்வதேச அமைப்பின் நீலக்கொடி சான்றிதழுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது.

கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை அமைப்பு, எல்இடி விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தவிர, சூரிய சக்தியில் இயங்கும் உள்கட்டமைப்பு, குடிநீர் கியோஸ்க்குகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துருப்பிடிக்காத எஃகு கழிப்பறை தொகுதிகள், உடை மாற்றும் அறைகள், ஜாகிங் டிராக்குகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட நீலக் கொடி சான்றிதழுக்கான 33 அளவுகோல்களை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு, 6 ​​கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், லூப் ரோட்டை மறுசீரமைக்க, சாத்தியக்கூறு ஆய்வு நடத்த, 17 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பகுதியில் 2 கிலோமீட்டர் வரையிலான மீன்பிடி படகுகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே புதிய மீன் மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிவரும் இவர்கள் மெரினாவை சர்வ்தேச சுற்றுலா தலமாக தரமுயர்த்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.

இதனால் நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், ஸ்ரீனிவாசபுரம் உள்ளிட்ட இந்த மீனவ கிராமங்களில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். மேலும், சீனிவாசபுரம் வரை சாலையோரத்தில் உள்ள கடைகளை முழுவதுமாக அகற்றி விடுவார்கள் என மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரை நாளை டிசம்பர் 26ம் தேதி சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறியுள்ள இவர்கள் இதனைத் தொடர்ந்து தங்கள் அடுத்த கட்ட போராட்டம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான மீனவ கிராமங்களை மீன்வள பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ள இப்பகுதி மக்கள் நீலக்கொடி சான்றிதழ் பெற்று, லூப் ரோட்டில் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், நொச்சிக்குப்பத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.