சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
கற்றலுக்கும் கட்டப்பாடுகளுக்கும் முன்னோடியானது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டி. சமீப காலமாக அங்கும் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே போலி பேராசிரியர்கள் பணியாற்றியது தெரிய வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு (Rape) செய்யப்பட்டு இருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னை அடையாளம் தெரியாத 2 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது பெரும் பரபபை ஏற்படுத்தி உள்ளது.
அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவத்தன்று, தான் தனது நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தனது நண்பரை அடித்து துரத்திவிட்டு, தன்னை அந்த இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் புகாரை பதிவு செய்த, கோட்டூர்புரம் காவல்துறையினர், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்யதிக்குறிப்பில், மாநிலத் தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகம், தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திலேயே மாணவிக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருப்பது வெட்கக் கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது சட்டம் ஒழுங்கு மாநிலத்தில் சீர்குலைந்து விட்டதை காட்டுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,”உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.