சென்னை: சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.15 லட்சம் ஆதார நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசு சார்பில் சொந்த தொழில் தொழங்க விரும்புபவர்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது. அதன் படி தமிழ்நாடு அரசு புதிய தொழில்முனைவோருக்கு ரூ.15 லட்சம் வரை நிதியுதவி வழங்கும் டான்சீட் திட்டத்தின் 7வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக கூறியுள்ளது.
தமிழக அரசு சார்பாக அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது. மேலும் சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சிகள் வழங்கி கடன் உதவி செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு இளம்தொழில் முனைவோரை ஊக்கும் வகையில், ஸ்டார்ட் அப் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்காக TANSEED எனப்படும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதாவது, TANSEED என்பது, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) வழங்கும் மானியத் திட்டமாகும், இது தமிழ்நாடு அரசாங்கத்தின் MSME துறையின் கீழ் கொள்கை செயலாக்க முகவராக செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், காலநிலை நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் பணிபுரியும் புதுமையான நிறுவனங்களைக் கண்டறிந்து ஆதரிப்பதற்கும், ஸ்டார்ட்அப்களுக்கு அடைகாக்கும் ஆதரவை வழங்குவதற்கும் வில்க்ரோவை TANSIM அதன் செயலாக்க பங்காளியாக இணைத்துள்ளது. TANSEED, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிதித் தேவையின் இடைவெளியை நிரப்ப, மனதிலிருந்து சந்தை வரை (அவை காப்புரிமை பெற்றதாகவும் இருக்கலாம்) தொடக்க நிலை நிதி தேவைகளை மானிய வடிவில் ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின்(டான்சீட்) 7-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், டான்சீட் திட்டம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழியாக பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓரு வருட கால தொழில் வளர் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது 3 சதவீத பங்குகளை உதவி பெறும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
புத்தாக்க சிந்தனையுடன் செயல்படக்கூடிய, வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளைக் கொண்ட, சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பிறிதொரு நிறுவனத்தில் நிறுவனமானது முன்பே செயல்பட்டு வந்த இருந்து பிரிந்து வந்ததாகவோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் கூட்டு அல்லது இணை நிறுவனமாகவோ இருத்தல் கூடாது.
மேலும், எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே, ஜனவரி 15ஆம் தேதி. 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினாலும், ஏதேனும் வினாக்கள் இருந்தாலும் tanseed@startuptn.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.