சென்னை: தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடம் எதிர்ப்பு காரணமாக, மதுரை அருகே ஏலம் விடப்பட்ட, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மேலும், டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. முன்னதாக இதுதொடர்பான ஏலம் விடுவதற்கான பணிகள் தொடங்கியபோதும், முன்னதாக, இந்த பகுதி சுரங்கத்திற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றபோதும், ஆட்சியில் இருந்த அதிமுக, திமுக அரசுகள் எந்தவொரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் ஏலத்தை மத்தியஅரசு விடுத்தது. இதை வேதாந்தா நிறுவனம் எடுத்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்தே அரசியல் கட்சிகள் விழித்துக்கொண்டன.
உடனே மதுரை எம்.பி. வெங்கடேசன் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய குரல் எழுப்பினார். அவரை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு அரசும் குரல் எழுப்பின. பாஜக மாநில தலைவர் வெங்கடேசன் உடனே டெல்லி சென்று டங்ஸ்டன் ஏலத்தை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சகத்திற்கு கடிதமும் எழுதினார். நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்தனர்.
இதைத்தொடர்ந்து, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. “இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்துள்ளது” என அரசியல் தலைவர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டங்ஸ்டன் ஏலம் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து, சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு பாஜக சார்பாகவும், மதுரை மாவட்ட சகோதர, சகோதரிகள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முடிவெடுப்பதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்த தோடு, அந்தப் பகுதிகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சுரங்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்துக்கு, உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கும் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி @narendramodi அவர்கள், எப்போதும் தமிழக மக்கள் மற்றும் நமது விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே முடிவுகள் மேற்கொள்வார் என்பது, இந்த நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த நேரத்தில் டங்ஸ்டன் போன்ற முக்கியமான கனிமங்கள் உட்பட அனைத்து முக்கிய கனிமங்களையும் ஏலம் விட மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
பின்னர், சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு – ஒழுங்குமுறை) சட்டம், 1957 என்பது 17.08.2023 முதல் சுரங்கங்கள் – கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2023 என்பதன் மூலம் திருத்தப்பட்டது. திருத்தச் சட்டமானது மற்ற அம்சங்களோடு சட்டத்தில் பிரிவு 11டி-ஐ சேர்த்தது, இது சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி டி-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘முக்கியமான கனிமங்கள்’ தொடர்பான சுரங்க குத்தகைகளையும், கூட்டு உரிமங்களையும் பிரத்தியேகமாக ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது. டங்ஸ்டன் அத்தகைய முக்கியமான கனிமங்களில் ஒன்றாகும்.
இந்த திருத்தத்தின் அடிப்படையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட தமிழ்நாட்டின் முக்கிய கனிம தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து மாநில அரசுக்கு சுரங்க அமைச்சகம் 15.09.2023 அன்று கடிதம் எழுதியது.
இதற்குப் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் 03.10.2023 தேதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கியதுடன், முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் என்று கோரினார்.
2021-2023-ம் ஆண்டில் முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் அரசுக்கு இருந்தபோது, தமிழ்நாடு எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக் கது. உண்மையில், ஏல நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய கனிமத் தொகுதி கூட ஏலம் விடப்படவில்லை.
நிலத்தின் சட்டத்தின்படி மத்திய அரசு முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு அமைச்சருக்கு பதிலளித்த பின்னர், சுரங்க அமைச்சகத்தின் செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு 2023 டிசம்பர் 6 அன்று, கடிதத்தின் மூலம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்படவுள்ள மூன்று முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களைக் கோரினார்.
தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர், 8.02.2024 தேதியிட்ட கடிதத்தில், நாயக்கர்பட்டி தொகுதி உட்பட இந்த மூன்று பகுதிகள் குறித்த விவரங்களை அளித்துள்ளார். இருப்பினும், 193.215 ஹெக்டேர் பரப்பளவில் (கனிமத் தொகுதியின் மொத்த பரப்பளவில் சுமார் 10%) பல்லுயிர் தளம் இருப்பதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பரிந்துரைக்கவில்லை.
சுரங்க அமைச்சகம் ம முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 24 தொகுதிகளின் ஏலத்தை இதுவரை நான்கு கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி, 2024 பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது. 2024 ஜூன் மாதத்தில் இரண்டாவது முயற்சியாக மீண்டும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இது 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் விருப்பமான ஏலதாரராக அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. 2024 பிப்ரவரியில் இந்த கனிமத் தொகுதி ஆரம்பத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டதில் இருந்து 2024 நவம்பர் 7 அன்று ஏல முடிவு அறிவிக்கப்படும் வரை, 2024 பிப்ரவரி முதல் 2024 நவம்பர் வரை சுரங்க அமைச்சகத்தின் பல ஏலம் தொடர்பான கூட்டங்களில் தமிழ்நாடு கலந்து கொண்ட போதிலும், ஏலம் குறித்து எந்தவொரு எதிர்ப்பும் கவலையும் குறித்து மாநில அரசிடமிருந்து வரவில்லை.
கலப்பு உரிமம் என்பது கனிம (ஏலம்) விதிகளின் கீழ் வழங்கப்படும் இரண்டு கட்ட சலுகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரிமம் முதலில் எதிர்பார்ப்பு (ஆய்வு) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது. வட்டார புவியியல் ஆய்வு கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்ட பூர்வாங்க சான்றுகளின் அடிப்படையில் ஒரு பெரிய பரப்பளவில் வள ஆய்வில் தொடங்கி, ஒப்பீட்டளவில் சிறிய வரையறுக்கப்பட்ட கனிம மயமாக்கப்பட்ட மண்டலத்தில் கனிம உள்ளடக்கத்தை நிறுவுவதில் முடிவடைகிறது. பின்னர் அது சுரங்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், கனிம மயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு சுரங்க குத்தகை வழங்கப்படுவதற்கு முன்பு, கூட்டு உரிமம் வைத்திருப்பவர், மாநில அரசு உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து பல அனுமதிகளைப் பெற வேண்டும், மேலும் அந்த செயல்பாட்டின் போது சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள், பல்லுயிர் பகுதிகள் போன்றவை நீக்கப்படுகின்றன. வழக்கமாக ஆய்வு நிலைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் இந்த உரிமையை மாநில அரசு எப்போதும் கொண்டிருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நலன் கருதி, முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதோடு நின்று விடுவது மட்டுமே சுரங்க அமைச்சகத்தின் பணியாகும். அதன்பிறகு, விருப்பக் கடிதம் வழங்குதல், கூட்டு உரிமம், சுரங்கக் குத்தகை ஆகியவை மாநில அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால், கூட்டு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை கையெழுத்திடுவதற்கு முன்பு பகுதியை மாற்றியமைக்கலாம். உற்பத்தி தொடங்கியவுடன், அனைத்து வருவாயும் மாநில அரசுக்குச் சேரும்.
இருப்பினும், இந்த வட்டத்திற்கு விருப்பமான ஏலதாரர் அறிவிக்கப்பட்ட பிறகு, வட்டாரப் பகுதிக்குள் ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளம் இருப்பதைக் காரணம் காட்டி இந்த கனிமத் தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பல முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. எனவே, கனிமத் தொகுதியை மறு ஆய்வு செய்து, பல்லுயிர் பெருக்க தளப் பகுதியை தொகுதியிலிருந்து விலக்கி தொகுதி எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜிஎஸ்ஐ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியில் ஒப்பந்தப்புள்ளி கோருவோருக்கு விருப்ப ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது