லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மத கலவரம் காரணமாக, 32 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்து கோயில் தற்போது மீண்டும் பக்தர்கள் வழிபடும் வகையில் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கான நடவடிக்கையை உ.பி. பாஜக அரசு எடுத்துள்ளது.
கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முசாபா்நகா் மாவட்டத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தால் அந்த பகுதியில் இருந்த சிவன் கோவில் மூடப்பட்டது. இந்த கோவில், நேற்று (டிச.23) மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
முசாபா்நகா் மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான லுத்வாலாவில் கடந்த 1971-ஆம் ஆண்டு இந்த சிவன் கோயில் கட்டப்பட்டது. அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற பாபா் மசூதி இடிப்புச் சம்பவத்தைத் தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த ஹிந்து குடும்பங்கள் புலம்பெயா்ந்து, கோயிலின் சிலைகளையும் ‘சிவலிங்கத்தையும்’ அவா்களுடன் எடுத்துச் சென்றனா். அன்றிலிருந்து கோயில் மூடப்பட்டிருந்தது. இதை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், டிசம்பா் 23-ஆம் தேதி கோயில் மீண்டும் திறக்கப்படும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ‘கோயில் மீண்டும் திறக்கப்பட்டு, ஆலயத்தில் அனைத்து விழாக்களும் அமைதியான முறையில், சுமூகமான சூழலுடன் நடைபெற்றன.
இந்த திறப்பு விழாவின்போது, நல்லிணக்கத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, ஊா்வலமாக வந்த இந்து பக்தா்கள் மீது உள்ளூா் முஸ்லிம்கள் மலா்தூவி வரவேற்றனா். 32 ஆண்டுகளாக மூடப்பட்ட பின்னா் கோயில் மீண்டும் திறக்கப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க தருணம்’ என மாவட்ட ஆட்சியா் விகாஸ் காஷ்யப் தெரிவித்தாா்.
இதற்கிடையில், உ.பி. மாநிலம், முசாபா்நகரிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சம்பல் மாவட்டத்தில், 46 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பஸ்ம சங்கா் கோயில் கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இது வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜாமா மசூதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது.
வாராணசியின் அருகில் உள்ள சண்டவுசியில் மூடப்பட்டிருந்த ஒரு கோயிலும் மீண்டும் திறக்கப் பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு இக்கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. பாங்கே பிஹாரி எனும் பெயரில் இந்த கிருஷ்ணன் கோயில் சுமார் 152 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது.
அதுபோல, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹயாத் நகர் பகுதியிலும் ஒருகோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ராதா கிருஷ்ணா, அனுமர் சிலைகள் கொண்ட இக்கோயிலும் சுத்தம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்கு தயார் செய்யப்படுகிறது. இங்கு கடந்த 1982-ல் ஏற்பட்ட மதக்கலவரத்துக்கு பின் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இதை மீண்டும் திறக்க யோகி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபோல, வாராணசியில் முஸ்லிம்கள் வாழும் மதன்புரா தெருவில் ஒரு கோயில், 1982-ல் நிகழ்ந்த மதக்கலவரத்துக்குப் பின் மூடப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை மீண்டும் திறந்து பூஜைகள் தொடங்க சனாதன் ரக் ஷா தளம் எனும் இந்துத்துவா அமைப்பினர் நேரில் சென்றுள்ளனர்.
இதேபோல், அலிகர் நகரில்சராய் ரஹ்மான் பகுதியில் இந்த சிவன் கோயில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதாகத் தெரிகிறது. இதுபோல், மூடப்பட்ட 15 கோயில்களை மீண்டும் திறக்க இருப்பதாக அலிகரின் கர்ணி சேனா எனும் இந்துத்துவா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.