சத்தீஸ்கர் மாநிலத்தில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், இந்த கணக்குகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் கணக்கு இருப்பது தெரிய வந்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய திருமணமான பெண்களுக்கான அரசின் திட்டத்தில் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் ஜானி சின்ஸ் பெயரைக் கண்டு சத்தீஸ்கர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில், பஸ்தார் மாவட்டத்தின் தாலூர் கிராமத்தில் பெறப்பட்ட விண்ணப்பத்தில் இந்த குளறுபடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, அங்கன்வாடி பணியாளர் வேதமதி ஜோஷியின் ஆவணங்களைப் பயன்படுத்தி வீரேந்திர ஜோஷி என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை 10 மாதங்கள் இந்த மோசடி வங்கி கணக்கில் பெறப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் வீரேந்திர ஜோஷி தனது வங்கி கணக்கிற்கு மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அரசை ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றதாக வீரேந்திர ஜோஷி மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தாளூரை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் மற்றும் இந்த விண்ணப்பங்களை சரிபார்த்த மேற்பார்வையாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.