1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய துருப்புக்களை எச்சரித்த லடாக்கைச் சேர்ந்த மேய்ப்பன் தாஷி நம்க்யால், ஆரிய பள்ளத்தாக்கில் காலமானார்.
போரில் தனது குறிப்பிடத்தக்க பங்கிற்காக கொண்டாடப்பட்ட நம்க்யால், இந்த ஆண்டின் துவக்கத்தில் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் செரிங் டோல்கருடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் லடாக்கின் ஆர்யன் வேலேவில் உள்ள அவரது சொந்த கிராமமான கார்கோனில் கடந்த வெள்ளியன்று தனது 58வது வயதில் காலமானார்.
இதுகுறித்து லேயை தளமாகக் கொண்ட ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன் நாம்கியாலுக்கு அஞ்சலி செலுத்தியது.
1999 ஆம் ஆண்டு மே மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய இராணுவத்தை எச்சரிப்பதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அவர் அங்கீகாரம் பெற்றார்.
சாதாரண உடையில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் படலிக் மலைத்தொடரில் பதுங்கு குழிகளைத் தோண்டுவதைக் கண்ட அவர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக இந்திய இராணுவத்திற்கு தகவல் கொடுத்தார்.
ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையைத் துண்டிக்கும் பாகிஸ்தானின் நாசவேலையை அறிந்த இந்திய ராணுவப்படை விரைவாகப் படைகளைத் திரட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
மே 3 முதல் ஜூலை 26, 1999 வரை நடந்த கார்கில் போரில், இந்தியா வெற்றி அடைந்ததற்கு சரியான நேரத்தில் இந்திய ராணுவத்தை விழிப்படையைச் செய்த நம்கியாலின் செயல் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.