டெல்லி: உ.பி.யில்  2025 ஜனவரியில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி,   தமிழகம், கேரளத்திலிருந்து 5  சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளா நடைபெறும்  நிலையில், 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. அதன்படி 2025  ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.  இந்த கும்பமேளாவில்  45 கோடி பக்தர்கள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உ.பி. மாநில பாஜக அரசு,  ரூ.4 ஆயிரம் கோடியில் ஏஐ தொழில்நுட்பத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

மகா கும்பமேளாவையொட்டி, நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களின்  வசதிக்காக வழக்கமான 10,100 ரெயில்களுடன் 2,917 சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை இயக்க உள்ளது. மொத்தம் 13,017 ரெயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்ல இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவுக்கு பக்தர்கள் செல்லும்  தமிழகம், கேரளத்தில் இருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஜனவரி 6ந்தேதி மற்றும்  20  தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து பிகாா் மாநிலம் கயாவுக்கு  இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06005) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், நாகா்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், பிரயாக்ராஜ் சியோகி வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக ஜன.9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கயாவில் இருந்து சிறப்பு ரயில் (எண்: 06006) இயக்கப்படும்.

இதேபோல்,  கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து ஜன.7, 21, பிப்.4 ஆகிய தேதிகளில் கயாவுக்கு சிறப்பு ரயில் (எண்: 06021) இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக கயாவில் இருந்து ஜன.10, 24, பிப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06022) இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோமதி நகருக்கு (லக்னோ) ஜன.8, 15, 22, பிப்.5, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06001) இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக கோமதி நகரில் இருந்து ஜன.11, 18, 25, பிப்.8, 22, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06002) இயக்கப்படும்.  இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், மாணிக்பூா், பிரயாக்ராஜ் சியோகி, வாரணாசி, அயோத்தியா வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து பனாராஸுக்கு பிப்.17-ஆம் தேதி சிறப்பு ரயில் (எண்: 06003) இயக்கப்படும். மறுமாா்க்கமாக பனாரஸில் இருந்து பிப்.20-ஆம் தேதி சிறப்பு ரயில் (எண்: 06004) இயக்கப்படும்.

இதுபோல், கொச்சுவேலியில் இருந்து பனாரஸுக்கு பிப்.18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06007) இயக்கப்படும். மறுமாா்க்கமாக பனாரஸில் இருந்து பிப்.21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06008) இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், திருவொற்றியூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாராங்கல், ஜபல்பூா், மாணிக்பூா், பிரயாக்ராஜ் சியோகி, மிா்சாப்பூா் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.