புதுக்கோட்டை: துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசு, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக, துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளுநர், இந்த குழுவானது யுஜிசி மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அறிவிக்கப்படவில்லை என கூறி வருகிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில், இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சட்டத்துறை அமைச்சர் ரகுபதில்,  துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது. தேடுதல் குழுவில் 3 பேரைத்தான் நியமிக்க முடியும், 4வதாக யுஜிசியில் இருந்து ஒருவரை நியமிக்க ஆளுநர் கூறுகிறார்.

ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது தேடுதல் குழுவில் புதிதாக யாரையும் சேர்ப்பதில்லை, நீதிமன்றத்துக்கு சென்றால் எங்கள் நியாயத்தையும் கூறுவோம் என தெரிவித்தார்.

பின்னர், பயங்கரவாதி பாஷா மறைவு ஊர்வலம்  உள்பட  அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  ருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கூட்டம் அதிகளவில் இருந்தால் அங்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்றவர்,  அம்பேத்கர் விவகாரத்தில் ஜெயக்குமார் கருத்துகளை கூறினால், பொதுச்செயலாளர் பதவி எதற்கு? என கேள்வி எழுப்பியதுடன்,  வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது பாஜக மட்டுமே, வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக தங்கள் கட்சியில் சேர்த்துள்ளதை பலமுறை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம் என்று தெரிவித்தார்.