சென்னை: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர், வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்த நிலையில், அங்கு காரில் வந்து மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்த தாக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து மாயாண்டி தப்பித்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஓடியுள்ளார். மாயாண்டியை பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயிலில், அவரை சரமாரியாக வெட்டியும், அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தை அரங்கேறியபோது அங்குள்ள காவல்துறையினர் தடுக்க முயலவில்லை என்றும், வழக்கறிஞர்களே கொலையாளிகளை மடக்கி பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கொலை செய்ததும் மனோராஜ், அவருடன் இருந்த சிவா, தங்க மகேஷ் ஆகியோர் காரில் கிளம்பி, திருநெல்வேலி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். சம்பவத்தின் போது, மாயாண்டியை கீழே விழச் செய்தவரான ராமகிருஷ்ணன் என்பவர், காரில் ஏற முடியாமல் போனதால், நீதிமன்றத்திற்கு எதிர் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றார். அவரை சிறப்பு எஸ்.ஐ., ஊய்க்காட்டான் துரத்தி சென்றார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் கார்த்திக் தம்பான், இருதயராஜ் ஆகியோர் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உடன், கொலை நடந்த இடத்தில் போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற பகுதியில் போலீசார் முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயாண்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், கொலையில் தொடர்புடைய முத்துகிருஷ்ணன் மாலையில் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, நீதிமன்ற வாசலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலீஸ் தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்களிடம், நீதிபதிகள் ‘மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். நீதிமன்ற வளாகத்தில் உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் என, 25 போலீசார் இருந்தும் கொலை நடந்துள்ளது. அதை ஏன் தடுக்கவில்லை?’ என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ”கொலை செய்யப்பட்டவருக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன; முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கவில்லை. ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை விரைவில் பிடித்து விடுவர்,” என்றார்.
அந்த ஒருவரையும், வழக்கறிஞர்கள் தான் பிடித்துக் கொடுத்ததாக கூறுகின்றனர். குற்றவாளிகளை, போலீசார் தேடி பிடிப்பது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. குற்றம் நடப்பதற்கு முன், அதை ஏன் தடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம்.
துப்பாக்கியை பயன்படுத்தி இருந்தால், கொலையை தடுத்திருக்கலாம். நீதிமன்றம் முன் நிற்கும் போலீசார், துப்பாக்கி வைத்திருக்கவில்லையா? உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தான் போலீஸ் பாதுகாப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அதை போலீசார் தடுப்பரா அல்லது அசம்பாவிதம் நடந்து முடிந்த பின் குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பரா
அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ”ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி காரில் சென்றபோது, இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது, பாதுகாப்பு போலீஸ் படுகாயமடைந்தார். திருநெல்வேலியில் நடந்த சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை அளிக்கிறோம்,” என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ”மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றார். தொடர்ந்து, ‘பொது மக்களின் பார்வையில் படும் வகையில், நீதிமன்ற வளாகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும். நீதிமன்றம் முன் நடந்த இந்த சம்பவத்தினால், வழக்கறிஞர்கள் அச்சம் அடைந்துள்ளனர். துப்பாக்கியை போலீசார் பயன்படுத்தி, கொலையாளிகளின் காலில் சுட்டு பிடித்திருக்கலாம்; அல்லது அவர்கள் தப்பி செல்லும் காரின் டயரில் சுட்டு பஞ்சர் ஆக்கியும் பிடித்திருக்கலாம். சீருடை அணிந்து பணியாற்றும் போலீசார், சாதாரணமாக இருந்து விட முடியாது’ என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின், இந்த கொலை சம்பவம் தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும், அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து, திருநெல்வேலியில் உள்ள வழக்கறிஞர்களிடம் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, பார் கவுன்சில் வழக்கறிஞர் சந்திரசேகருக்கும், நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு விசாரணை, இன்றும் தொடர்கிறது.