சென்னை: ப பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான  தமிழக அரசின் பணிகள்  நிறைவடைந்து விட்டதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா   நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பரந்தூர் விமான நிலைய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வெகு விரைவில் விமான நிலையம் அமைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

விமானம் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான நடைமுறைகளை மாநில அரசு முடித்துவிட்டதாகவும், மத்திய அரசிடம் இருந்து பதில் வர வேண்டும், அதற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை நகரம், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் பிற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப, சென்னைக்கு ஒரு பெரிய விமான நிலையம் அவசியமாகிவிட்டது. ஏனெனில், பெரிய விமானங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட நவீன விமான நிலையம் இல்லாததால், பல சர்வதேச விமான சேவைகள் சென்னையைத் தவிர்த்து, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களைத் தேர்வு செய்கின்றன.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசு சென்னைக்கு அருகில் பரந்துரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை முதன்முதலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2007-ம் ஆண்டு அறிவித்தார். பின்னர், பல ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் இடம் இதற்கு மிகவும் ஏற்றது என முடிவு செய்யப்பட்டது. புதிய பரந்தூர் விமான நிலையம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். இது, வெளிநாட்டு முதலீடுகளை மேலும் ஈர்க்கவும், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும். மேலும், இது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் மக்களுக்கு நல்ல போக்குவரத்து வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமானம் நிலையம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளைஹயும் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய  சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்வதற்குப் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால், வெளிநாடுகளிலும், பெரும் நகரங்களில் இருப்பது போன்ற சகல வசதிகள் கொண்ட விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்துடன் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2022 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதாக அறிவித்தது  இந்த மாபெரும் திட்டத்திற்காக 20 கிராமங்களில் இருந்து சுமார் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய மத்திய – மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த மாபெரும் விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது.  இதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள  நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.

சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்திற்கான டெண்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விடப்படும் என TIDCO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.