திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 26ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால், இதை காண பல லட்சக்கணக்கானபக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மாதத்தையொட்டி, தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி மாலை 4 மணிக்கு நடை திறந்தது. இதைத்தொடர்ந்து, இந்த மாதம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். இதனால், பல லட்சம்பேர் சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர்.
மண்டல பூஜை காலமான 41 நாட்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி தங்க அங்கி ஊா்வலம் நடைபெற்று வருகிறது. மண்டல பூஜை தினத்தன்று, சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
தங்க அங்கி ஊா்வலம் மற்றும் மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, பக்தா்களுக்கு சுமூக தரிசனத்தை உறுதி செய்வது குறித்து மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் கூறிய தேவசம் போர்டு அதிகாரிகள், மண்டல பூஜையையொட்டி பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. பக்தா்கள் வெளியேறும் வாயில்களை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், சிறப்பாக பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
பக்தா்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, நெரிசல் இல்லாமல் சுமூகமாக செல்வது உறுதி செய்யப்படும். பக்தா்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் போ் தங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மண்டல பூஜை முடிந்ததும், கோவில் நடை சாத்தப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.