சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது, அதை அறநிலையத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள  சென்னை உயர்நீதிமன்றம். டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் தக்ஷிண நிதியைக் கணக்கை  தாக்கல் செய்யுமாறு பொது தீட்சிதர் கமிட்டிக்கு உத்தரவிட்டது.

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கா் நிலத்தை அந்தக் கோயிலை நிா்வகித்து வரும் தீட்சிதா்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை புகார் கூறி உள்ளது. இதை விசாரித்த சென்னை உயர்நீதின்றம், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, 1974 ஆம் ஆண்டு முதல் விற்பனைப் பத்திரங்கள், உடைமை உரிமைகளைப் பயன்படுத்தி விற்கப்பட்ட கோயில் சொத்துக்கள் தெரியவந்துள்ளது.

முன்னதாக,  சிதம்பரம் கோயில் நிா்வாகம் 2014-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் நிா்வாகம் மீண்டும் தீட்சிதா்கள் வசமானது. அதன்பிறகு கோயில் வருமானம் குறைந்துவிட்டதாக அறநிலையத் துறை குற்றஞ்சாட்டியதுடன் இதுகுறித்த வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதாவது , கோயில் நிர்வாகம் தீட்சிதர்களின் கைகளுக்கு செல்வதற்கு முன்பு,  ஆண்டுக்கு ரூ. 3கோடிக்கு மேல் வருவாய் வந்த நிலையில் தற்போது ரூ.2 லட்சமாக குறைந்துவிட்டதாக தீட்சிதா்கள் தரப்பில் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று அந்த மனுவில் அறநிலையத் துறை ஆணையா் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், எஸ். சவுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதா்கள் தரப்பில், கோயிலின் வரவு – செலவு கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. நடராஜா் கோயிலுக்கு மன்னா்கள் மற்றும் புரவலா்கள் சுமாா் மூன்றாயிரம் ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது ஆயிரம் ஏக்கா் மட்டுமே உள்ளது. எனவே, அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, “அறநிலையத் துறை சாா்பில், நடராஜா் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கா் நிலம் இருந்த நிலையில், அதில் 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தை தீட்சிதா்கள் அவா்கள் இஷ்டப்படி தனி நபா்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.  இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த நீதிபதிகள், 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு-செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதா்கள் தரப்புக்கு உத்தரவிட்டனா்.

அத்துடன், கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கா் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கா் நிலங்களை தீட்சிதா்கள் தனிநபா்களுக்கு விற்பனை செய்தது தொடா்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசமில்லை. நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத் துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது” என வாதிட்டார்.

இதனையடுத்து, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளது” எனக் கூறி அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன, கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து அறநிலையத் துறை அறிக்கைக்கு பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை  டிசம்பருக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையல், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  சிதம்பரம் நடராஜர்  கோயில் நிலத்தை பொது தீட்சிதர்கள் சந்தேகத்திற்கு இடமான தலைப்புகளில் விற்பனை செய்ததை  அறநிலையத்துறை ஆதாரத்துடன்  அம்பலப்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த நிலங்கள்,   1974 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு இருப்பதற்கான  ஆதாரங்கள் உள்ளதாகவும், விற்பனைப் பத்திரங்கள், உடைமை உரிமைகளைப் பயன்படுத்தி கோயில் சொத்துக்கள் விற்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் , இதுகுறித்து மேலும் விசாரிக்க அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கியது.

மேலும், இந்த சொத்துக்கள்,  சுயமாக கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்ததால், டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் தக்ஷிண நிதியைக் கணக்குப் போடுவதற்கான திட்டத்தை முன்மொழியுமாறு பொது தீட்சிதர் கமிட்டிக்கு உத்தரவிட்டது.