மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் “லாவண்யா கட்டாய மத மாற்றம் செய்யப்படவில்லை” என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி லாவண்யா கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி விஷம் அருந்தியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இந்த வழக்கில் ஜனவரி 16 ஆம் தேதி, தமிழ்நாடு காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது, லாவண்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால், பள்ளி அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகக் குறிப்பிட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 305 (குழந்தையின் தற்கொலைக்குத் தூண்டுதல்), 511 (வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் கூடிய குற்றங்களைச் செய்ய முயற்சித்தல்) மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எப்ஐஆரில் கட்டாய மதமாற்றம் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து லாவண்யா கட்டாய மதமாற்றம் செய்ய தூண்டப்பட்டதாகவும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், “மதமாற்ற குற்றச்சாட்டை சந்தேகிக்க எந்த அடிப்படை காரணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.