சென்னை: கலைஞருக்கு தூண்போல உடன் நின்றவர் என பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர் மறைந்த பேராசிரியர் அன்பழகன். திமுக முன்னாள் பொதுச்செயலாளராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்று அவரது 102 பிறந்தநாள் . இதையொட்டி அவரது உருவபடத்துக்கு திமுகவினர் மரியாதை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், அன்பழகனின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.