கோவை: சமீபத்தில் கும்பாபிஷேசம் நடைபெற்ற கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கம் பொள்ளாச்சி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக, அங்கு நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

டிசம்பர் 12ந்தேதி வெகுசிறப்பாக நடைபெற்ற கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் மஞ்சுளாதேவி, தங்கமணி, திருமுருகன், மருதமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கோவில் வளர்ச்சிக்கான திட்டங்கள், பணிகள் குறித்து கேட்டறிந்தார். கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவதற்காக ஆயத்தப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதற்கு, அறங்காவலர் குழு தலைவர், அதிகாரிகள், கருணை இல்லம் செயல்பட்ட பகுதியில் குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்வதாகவும், மண்டபம் உள்ள பகுதியில், தங்கும் விடுதி கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். இதைதை தொடர்ந்து, கோவிலில், 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஓய்வு மண்டப பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மேலும், பெடரல் வங்கி வழங்கிய பேட்டரி வாகனத்தை பார்வையிட்டு, வங்கி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக, மாசாணியம்ன் கோவிலுக்கு உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் கிடைத்த 28 கிலோ, 906 கிராம் பொன் இனங்கள், பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக மத்திய அரசின் உருக்கு ஆலைக்கு ஒப்படைக்கும் பணி நடந்தது. இதில் அமைச்சர் பங்கேற்று, அதை வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைடதார்.
அதன்படி, கோவை, ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயில், பொள்ளாச்சி எஸ்பிஐ வங்கியில் தங்க வைப்புச் சான்றிதழில் 28 கிலோ 906 கிராம் தங்கம் காணிக்கையாக முதலீடு செய்யப்பட்டது.
442 கிலோ தங்கத்தில் இருந்து ஆண்டு வட்டியாக ₹5.79 கோடியுடன் தங்க முதலீடுகள் மூலம் கோயில் வருவாயை ஈட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைச்சர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, பேரூர் மற்றும் மருதமலை கோவில்களில் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

கோவை மக்களின் நீதி தேவதையாக திகழ்பவர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில். அம்மன் சயனகோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்புகள் இருந்தாலும் பலவிதமான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதான பொதுமக்களிடைய அசைக்க முடியாது நம்பிக்கை உள்ளது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபடுவார்கள். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இத்தகைய சிறப்புமிக்க மாசாணியம்மன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக, கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த டிசம்பர் 6-ந் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகளும் தொடங்கி நடந்து வந்தது. கோபுரம் மற்றும் விமானங்களில் பொருத்துவதற்காக 52 புதிய கும்பங்கள் தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் டிசம்பர் 12ந்தேதி அன்று காலை நடந்தது. காலை 7.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.45 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு மாசாணியம்மன் கோவில் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்பட பல்லாயிரம் பேர் கலந்துகொண்டனர்.
