உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் புதிய Gulfstream G650 ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த ஜெட் விமானம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் Gulfstream G200 ஜெட் விமானத்தை வைத்திருந்த ரொனால்டோ 2022ம் ஆண்டு அதை விற்பனை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். 2015ம் ஆண்டு இந்த Gulfstream G200 ஜெட் விமானத்தின் மதிப்பு 19 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.170 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் புதிதாக வாங்கியிருக்கும் Gulfstream G650 ஜெட் விமானம் 73 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.619 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகையைச் சேர்ந்த 568 ஜெட் விமானம் உலகம் முழுவதும் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
16 பேர் வரை அமரக்கூடிய இந்த விமானத்தின் என்ஜின்களை ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது எந்த வானிலையிலும் துல்லியமான மற்றும் பாதுகாப்பான தரையிறங்கும் திறன் கொண்டது. இந்த ஜெட் விமானம் நீண்ட தூர வான் பயணத்திற்கான சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும் என்று நிறுவனம் கூறுகிறது.
ரொனால்டோ வாங்கியுள்ள விமானத்தில் அவரது தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விமான நிறுவனம், அதில் 19 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 3 பகுதிகளாக பிரிக்கக்கூடிய விமானத்தின் ஒரு பகுதியில் 10 பேர் வரை தூங்கத் தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வகை விமானம் ஆண்டுக்கு 200 மணிநேரம் பறந்தால், அதன் பராமரிப்புக்காக சுமார் 16 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.