காங்கிரஸ் ஆட்சியின்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரையுலகப் பிரபலமும் சினிமா பாடலாசிரியருமான ஜாவித் அக்தர்.
ஜாவித் அக்தர் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் தம்முடைய இறுதிஉரையில் “அவை முடக்கமும் பிரிவினைவாதமும் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லாதெனவும், தேர்தல் ஆதாயங்களை மறந்து, அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
“ மோடியின் அமைச்சரவையில் நல்ல நிர்வாகத்திறமையுள்ள தலைவர்கள் உள்ளார்கள் ஆனால் பிரிவினைவாத கருத்துக்களை தெரிவிக்கும் மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்களை மோடி களையெடுக்க வேண்டுமெனவும் அக்தர் எச்சரித்தார்.
அரசும், எதிர்க்கட்சிகளும் அடுத்தத் தேர்தல்குறித்து கவனம் செலுத்தாமல் தேசத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென அவர் கூறியதை உன்னிப்புடன் கவனித்து மேசையைத் தட்டி அனைத்துக்கட்சியினரும் பாராட்டினர்.
பாரத அன்னை வாழ்க எனும் கோஷமிட தன்னை யாரும் வற்புறுத்த முடியாதெனவும், பாரத அன்னை வாழ்க எனக் கூறினால் தான் தேசப் பக்திமிகுந்தவர் என இந்திய அரசியல் சாசனம் கூறவில்லையென்று இஸ்லாமிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாசுதின் ஒவாய்சி பேசியிருந்ததை கடந்த சில நாட்களாகப் பா.ஜ.க.வினர் கண்டித்து வருகின்றனர்.
ஜாவித் அக்தரும் ஒவாய்சியை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.
இந்திய அரசியல் சாசனம் ஷெர்வானி ஆடையணியவோ குல்லா அணிந்துகொள்ளவும் தான் கூறவில்லை. எனவே நான் பாரத அன்னை வாழ்க எனக் கோஷமிடுவது குடிமகனின் கடமையா இல்லையா என்று அறிந்துக்கொள்ள விரும்பவில்லை, அவ்வாறு கோஷமிடுவது என்னுடைய உரிமை என்றுக் கூறி “பாரத அன்னை வாழ்க” எனச் சில முறை முழக்கமிட்டார்.
அதே சமயம், முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமெனக் கூறும் ஆர். எஸ் எஸ் அடிப்படைவாதிகளையும் கண்டிக்கத் தவறவில்லை. இன்றையச் சூழ்நிலையில் “சிறியக் குழுக்கள்” தலையெடுப்பதை வேதனையுடன் குறிப்பிட்ட அக்தர்,
“இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் ஜன நாயகத்தைக் காக்க வேண்டுமெனில் மதச்சார்பின்மையை பேணவேண்டியது மிக அவசியம்” என்றும் எச்சரித்தார்.
ஒரு மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் தற்போது சந்தித்து வரும் பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இந்தியாவில் ஆழமாய் வேர்விட்டுள்ள ஜனநாயகத்தை எப்பாடுப் பட்டாவது காக்க வேண்டுமெனவும்.
“மதச்சார்பின்மையில்லாது ஜனநாயகம் இருக்க முடியாது எனவே மதச்சார்பின்மையை காக்க வேண்டும். இதுவே நாம் எய்தியுள்ள மிகப்பெரிய சாதனை என்று நம்புகிறேன்” என்றும் அக்தர் குறிப்பிட்டார்.