சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில், மேல்சபையில் “இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்” என்ற இரண்டு நாள் விவாதத்தை முடித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக அரசியல் சட்டத்தையே கிழிந்தெறிந்தவர்கள் காங்கிரசார் என்றும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீற விரும்புவதாக குற்றம் சாட்டியதுடன்,  அம்பேத்கரின் பெயரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக குறை கூறினார்.  – அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் , அம்பேத்கர்’ எடுத்திருந்தால் கடவுளின் பெயரை பலமுறை சொன்னால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கூறினார். ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது என  விமர்சனம் செய்திருந்தார்.

அமித்ஷாவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று இரு அவைகளையும் முடக்கிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேர்கர் படத்துடன் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்