சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நிர்வாகி என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக திமுக பிரமுகர் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு பின்புலமாக இருந்துவந்த அரசியல் கட்சியினர்மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் கள்ளச்சாராய உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி நவம்பர் 20 சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், தமிழ்நாடு அரசையும் கடுமையாக சாடியிருந்தது.
இந்த நிலையில், கள்ளச்சாராய வழக்கில் 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நநீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் அனைத்து வழக்குகளிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், அவர்களின் மனுவை ரத்து செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை எதன் அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், அவவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்தார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இத்தனை ஆண்டுகளாக அந்த பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றால் மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், கள்ளச்சாராயம் விற்பனை விஷயத்தில், அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.