ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து சுமார் 14.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில், கென்யாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர் மற்றும் அந்த பெண்ணை சோதனை செய்தபோது வயிறு பகுதி வீங்கியிருப்பதைக் கண்டனர்.
இதனால் அவரது வயிற்றில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில் வயிற்றில் கேப்ஸுல்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அங்கு மருத்துவர்கள் உதவியுடன் அவரது வயிற்றில் இருந்து 90 கேப்சூல்களை எடுத்தனர்.
அந்த கேப்சூல்களில் 1.424 கிலோ எடையுள்ள கோகெய்ன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு ரூ. 14.2 கோடி என மதிப்பிட்டுள்ள அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தி வந்த பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சென்னையில் இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதாக இருந்தது உள்ளிட்ட விவரங்களை விசாரித்து வருகின்றனர்.
தவிர, ஏற்கனவே இந்தப் பெண் சில நாட்களுக்கு முன் மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.