சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம். கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், விரைவில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது. வேட்பாளர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உயிரிழந்தார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையான மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கினார். இவரும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவரும் சுமார் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த நிலையில், உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் 2வது முறையாக காலியாகி உள்ளது. அதாவது கடந்த மூன்றவரை ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
2026-ம் ஆண்டு அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில், தேர்தல் விதிகளின் படி 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அடுத்த 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.