விழுப்புரம்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள்  அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று  துச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மக்கள் சாலைமறியல்  செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால், பரபரப்பு நிலவி வருகிறது.

அண்மையில் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்ட சாத்தனூர் அணை காரணமாக , விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல கிராமங்கள் இரவோடு இரவாக வெள்ளத்தால் சூழப்பட்டது. பல பகுகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால், அவர்களுக்கு குடிக்க தண்ணீர்கூட கிடைக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதைத்தொடர்ந்து, வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால், அறிவித்தபடி இன்னும் பல கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் சாலைகளுக்கு வந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (டிசம்பர் 16ந்தேதி அன்று)   ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்  திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நீண்ட வரிசைக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த  தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

அதேபோல, கடலூர் சன்னியாசிபேட்டையிலும் ரூ.2000 வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து போகச் சொல்லியும் கேட்காத அவர்களை, வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே பலர் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களையும் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில் மற்றொரு தரப்பினர்,  தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தக்கோரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.