கோவை: தமிழக பாடத்திட்டத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
2027-ம் ஆண்டுக்குள் 18,000 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை முழுமையாக கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரியில், கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. . இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களை தயார்படுத்துவது, பள்ளிகளின் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள், இந்த கல்வி ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகள், திருச்சியில் நடைபெற உள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள சந்தித்தபோது, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வுகூடங்கள் உள்ளன. இவற்றை நவீனமயாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார். 2027-ம் ஆண்டுக்குள் 18,000 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை முழுமையாக கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள், மன அழுத்தம் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்றவர், பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்று ஆய்வு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வுக்கூட்டங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதால் தான் அவர்கள் சாதனை புரிகிறார்கள் என்றார்.
தொடர்ந்து பேசியவர், பள்ளிக் கல்வித் துறை வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடத்துகிறார்கள். அது பெரும்பாலும் தவறாக இருப்பதாக குற்றம் சாட்டிவர், தமிழ்நாடு அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றவர், இந்தியாவிலேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஒரே அரசு தமிழக அரசு தான் என்று பெருமிதம் தெரிவித்தவர், அனைத்து பள்ளிகளுக்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு வருகிறது, அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வு கூட்டத்துக்கு வந்த அமைச்சர், விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக உபகரணங்களை கண்டுபிடித்த கோவை மாவட்டம், அரசூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை அமைச்சர் கௌரவப்படுத்தினார். அதேபோல், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களையும் அமைச்சர் பாராட்டினார்.