ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார்.

இந்த விவகாரம் இன்று ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த கோயில் நிர்வாகிகள் கோயிலுக்குள் ஜீயர்கள், பட்டர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட இடத்தில் இளையராஜா அதை உணராமல் அங்கு செல்ல முயன்ற நிலையில் அவருக்கு அதுகுறித்து அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவர் உள்ளே நுழையாமல் தனக்கான இடத்தில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்று விளக்கமளித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா, “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறையும் விளக்கமளித்துள்ளது, “கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் ஆண்டாள் உள்ளிட்ட உற்ச்சவமூர்த்திகளின் சிலை உள்ளதால் அங்கு கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் ஜீயர்களைத் தொடர்ந்து வந்த இளையராஜா அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட நிலையில் கோயில் கட்டுப்பாடு குறித்து ஜீயர் அவரிடம் எடுத்துக்கூறியதை அடுத்து இளையராஜா அதனை ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபத்திற்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார். இதனை ஆண்டாள் கோயில் செயல் அலுவலரும் உறுதிப்படுத்தியுள்ளார்”

இதனால், கோயிலுக்குள் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…

[youtube-feed feed=1]