இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான ‘மூக்’ அதன் இந்திய துணை நிறுவனங்கள் மூலம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய ரயில்வே ஒப்பந்தங்களைப் பெற டெண்டர்களில் முறைகேடு செய்ய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏல ஒப்பந்தத்தில் இருந்து போட்டியாளர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூக் மோஷன் கண்ட்ரோல் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் மற்றும் ஏஜெண்டுகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற கமிஷன் (SEC) கைப்பற்றியது.
இதுதொடர்பாக அமெரிக்க நிறுவனத்திடம் மேற்கொண்ட விசாரணையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டது.
இந்த லஞ்ச வழக்கில் இருந்து விடுபட SECக்கு $1.7 மில்லியன் (ரூ.14.5 கோடி) அபராதம் செலுத்த மூக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதமும் அளித்துள்ளது.