டெல்லி
இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பக்க்குதி உருவாக உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வருகிற 16 ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியும் தென் மாவட்டங்களுக்கே அதிக கனமழை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.