டெல்லி: மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்பி கேள்விக்கு மத்திய அரசு  பதில் அளித்து உள்ளது.

சென்னை மெட்ரோ முதல் கட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவெற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் இரண்டு வழித்தடங் களில் செயல்பட்டு வருகிறது.  மேலும் 2ம்கட்ட மெட்ரோ பணி விரிவாக்க, 3வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மூலம் தினசரி  3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சேவை பெறுகிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 90 லட்சம் பேர் வரை இப்போது பயணிக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து, மதுரை, கோவை உள்பட பல மாவட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் கொண்டுவர தமிழ்நாடு அரசு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே  இதுதொடர்பான ஆய்வு அறிக்கை நடத்தி, மத்தியஅரசின் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கோபிநாத் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக  கேள்வி எழுப்பினார். அதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

‘மத்திய அரசு ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதில் மத்திய தொகை, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் கேட்கும் கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்படும். அதில் சென்னை மெட்ரோ நிறுவனம், இதுவரை மத்திய நிதி உதவி குறித்து எந்த கோரிக்கையும் எழுப்பவில்லை’ என்றார்.

மேலும் அவர் மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை கடந்த டிசம்பர் 5 ந்தேதி தான் தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்யும்.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள்   அதிகரித்து வருகிறது.  ரயில் நிலையத்திலேயே பார்க்கிங் , உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 கோடி மக்கள் வசிக்கும் நிலையில். அதில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தினசரி சென்னை மெட்ரோவை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடம் சென்னை மாநகரத்தை முழுமையாக கவர் செய்கிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை ( 44.6 கி.மீ. ) 5-வது வழித்தடமும் செயல்பட போகிறது. இந்த மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே தமிழக அரசு பணிகளை தொடங்கியது. இதனால் இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக கருதப்பட்டு, அதற்கான நிதியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு, இந்த நிதியை ஒதுக்குவதாக அறிவித்து விட்டது.