காங்கிரஸ் மற்றும் ஜார்ஜ் சோரஸ் தொடர்புபடுத்தி பாஜக வெளியிடும் செய்திகள் போலியானவை என்று தி க்விண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் நன்கொடை மூலம் நடத்தப்படும் OCCRP ரஷ்யா, வெனிசுலா, மால்டா, சைப்ரஸ் மற்றும் மெக்சிகன் போதைப்பொருள் விற்பனையாளர்களின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டத்தின் (OCCRP) அறிக்கையை மேற்கோள்காட்டி மீடியா பார்ட் இதழில் வெளியான செய்தியை காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தொடர்புபடுத்தி உள்ளது.
OCCRP எனும் சுயாதீன புலனாய்வு இதழ் ஹங்கேரிய-அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் உதவியுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இதையடுத்து ஜார்ஜ் சோரஸ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுகிறார் என்று பாஜக கூறியுள்ளது.
அதானி குறித்த ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி பெற்ற ஓசிசிஆர்பி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பியதாகவும், அதை ராகுல் காந்தி அதானியை விமர்சிக்க ஆதாரமாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டியுள்ளது.
பாஜக-வின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்த தி க்விண்ட் நாளிதழ் பாஜக போலி செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
மீடியா பார்ட் இதழில் வெளியான செய்தியில் இந்தியா குறித்தோ ராகுல் காந்தி குறித்தோ எந்த ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அதானி, பெகாசஸ் ஆப் மற்றும் 2021 ஆம் ஆண்டு கோவாக்சின் இறக்குமதியை பிரேசில் நிறுத்தியது உள்ளிட்ட OCCRP செய்திகளை பதிவிட்டுள்ள பாஜக OCCRPயில் இந்த செய்தி வெளியானதை தொடர்ந்தே காங்கிரஸ் இதுகுறித்து பேசியதாக கூறியுள்ளதுடன் காங்கிரஸ் கட்சிக்கும் ஜார்ஜ் சோரஸ் இடையே உள்ள உறவு வெளிப்படுவதாகவும் கூறியிருந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்த தி க்விண்ட், அதானி, பெகாசஸ் ஆப் மற்றும் பிரேசில் கோவாக்சின் தொடர்பான செய்திகள் இந்திய நாளிதழ்களில் ஏற்கனவே வெளிவந்ததை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க அரசின் நன்கொடை மூலம் நடத்தப்படும் OCCRP ரஷ்யா, வெனிசுலா, மால்டா, சைப்ரஸ் மற்றும் மெக்சிகன் போதைப்பொருள் விற்பனையாளர்களின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் மற்றும் ஜார்ஜ் சோரஸ் தொடர்புபடுத்தி பாஜக வெளியிட்ட பதிவுகள் போலியானவை என்றும் அவை திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் தி க்விண்ட் இதழ் நடத்திய உண்மை சரிபார்ப்பு மூலம் தெரியவந்துள்ளது.