ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள டெல்கோய் காவல் எல்லைக்குட்பட்ட திமிரிமுண்டா கிராமத்தில் எட்டு மூட்டை நெல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்கள் ஊர் மக்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் சுரேஷ் பதான் என்பவர் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு நபர்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சுரேஷின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு கண்விழித்த அக்கம்பக்கத்தினர், சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பேர் சென்றதை பார்த்துள்ளனர்.

அவர்களை விசாரித்த போது அங்கிருந்து அவர்கள் தப்பிக்க முயற்சி செய்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் குரல் கொடுத்ததை அடுத்து ஊர்மக்கள் ஒன்று கூடி அந்த திருடர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

இதில் பிடிபட்டவர்கள் பாபுலி பதான் மற்றும் அகி பதான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பிடித்து கட்டிவைத்த கிராம மக்கள் இன்று காலை நடத்திய பஞ்சாயத்தில் இவர்களுக்கு கரும்புள்ளி குத்தி செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது குறித்து அறிந்த காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.