குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்புக்கு உரிய விலை நிர்ணயம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறுதல், கலசா-பந்தூரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெல்காம் சுவர்ண விதான சவுதா மார்க்கம், ஹலகா அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அப்போது, ​​இரண்டு அரசுப் பேருந்துகள் போராட்டக்காரர்களைக் கடந்து முன்னால் வந்தன. விவசாயிகள் ஓடி வந்து சாலை மறியல் செய்து பஸ் டிரைவரின் கைகளை பச்சை துண்டுகளால் ஸ்டியரிங்கில் கட்டினர்.

இதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விவசாயிகள் சாலை மறியலின் போது அவர்களை கடந்து செல்ல முயன்ற இரண்டு அரசு பேருந்து ஓட்டுனர்கள் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.