சிரியா அதிபர் பஷார் அல் அசாத் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுவதை அடுத்து சிரியாவில் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக தீவிரவாத அமைப்பின் புரட்சியால் ஆட்சி இழந்த இரண்டாவது நாடாகிறது சிரியா.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் மட்டுமே அசாத் தஞ்சமடைய முடியும் என்ற நிலையில் அவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ-வில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1971ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ஹபீஸ் அல் அசாத், சிரியாவில் உள்ள அலாவைட் எனப்படும் ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் அப்போது ராணுவத்தில் அதிகளவு இருந்த அலாவைட் பிரிவினரின் உதவியுடன் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து 2000மாவது ஆண்டில் ஹபீஸ் அல் அசாத் மறைவுக்குப் பின் 34 வயதான பஷார் அல் அசாத் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார், அதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.

சிரியாவின் பெரும்பான்மை மக்களான சுன்னி முஸ்லீம் இனக் குழுக்களுடன் 2011ம் ஆண்டு முதல் கடந்த 13 ஆண்டுகளாக அரசுக்கு மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த மோதலின் உச்சகட்டமாக நவம்பர் 27ம் தேதி சிரியாவில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய இராணுவத்திற்கும் இடையே மோதல் தொடங்கியது. படிப்படியாக கிளர்ச்சிக் குழுக்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

கடந்த ஒரு வாரத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் உட்பட 5 பெரிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதில் அலெப்போ, ஹமா, ஹோம்ஸ் மற்றும் தரா ஆகியவை அடங்கும்.

டிசம்பர் 8 அன்று, ஜனாதிபதியின் அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி, ஜனாதிபதி அசாத் நாட்டை விட்டு வெளியேறியதை சிரிய இராணுவம் உறுதிப்படுத்தியது. இத்துடன் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

அசாத் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சிரிய பிரதமர் முகமது காசி அல்-ஜலாலி கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க முன்மொழிந்தார். நாட்டிலேயே இருப்பேன் என்றும், சிரிய மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் ஜலாலி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது, இது அனைத்து சிரியர்களையும் ஒன்றிணைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தலைமையிலான HTS தீவிரவாத குழு மற்றும் அமெரிக்க ராணுவ ஆதரவு பெற்ற குர்த் இனமக்களின் சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) ஆகியவை புதிய ஆட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் ராணுவ உதவியுடன் ஆட்சியில் நீடித்து வந்த சிரிய அதிபர் அசாத்துக்கு லெபனான் – ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் ஆதரவும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் ஆதரவும் குறைந்தது.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ ஆதரவு பெற்ற குர்த் கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் HTS தீவிரவாத அமைப்பு சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து 70 – 80 சாத்வீத மக்கள் கொண்ட சுன்னி முஸ்லீம்கள் 54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில் 10 சதவீதமே உள்ள அலாவைட் இனத்தினர் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.