சென்னை: பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை?  எடுக்கப்படும் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பரம்பரை  ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியதாக பேசிய பேச்சு,  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  திமுகவின் வாரிசு அரசியலை சுட்டிக்காட்டியே ஆதவ் அர்ஜூனா  பேசியதாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பேசி வருகிறார் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய திருமா, ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து. இருந்தாலும், இதுகுறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

சென்னையில் இன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து ‘எல்லோருக்கமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.

இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “கருத்தியல் சிந்தனை கொண்ட ஒருவர் தான் முதலமைச்சராக வர வேண்டும். தமிழ்நாடு ஊழலை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அம்பேத்கர் கொள்கையை பேசுபவர்கள் ஏன் அவரை மேடையேற்றவில்லை. மன்னர் பரம்பரையை உருவாக்க இனி தமிழகம் ஒருபோதும், இடம் தராது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. இன்று மன்னர் பரம்பரையை ஒழிப்பதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் நமக்கு தேவைப்படுகிறது. 2026 தேர்தலுக்கான பணிகள் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.

1கோடியே 40லட்சம் பேர் தலித்கள். ஆனால், ஆட்சியிலும் பங்கு அதிகாரித்திலும் பங்கு என்று கேட்டால், தவறு என்கிறார்கள். வெறும் 25 சதவீதம் மட்டுமே வைத்துக் கொண்டு எப்படி நீங்கள் பெரியக் கட்சி என்கிறீர்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வேண்டும். அதில் தலித்களுக்கு பங்கு வேண்டும். 69% சமூக நீதியை உருவாக்கிவிட்டோம். ஆனால் அரசியலில் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால் விடவே மாட்டார்கள். மன்னர் ஆட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னர் ஆட்சியை கேள்விக்கேட்டால் சங்கி என கூறிவிடுவார்கள்” என்று பேசினார்.

இந்த நிலையில்  திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுன் பேசிய கருத்து அவருடைய சொந்த கருத்து என்றவர்,

விழாவில் விஜய், திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என கூட்டணி கட்சிகள் அவரை கார்னர் செய்தாக கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,   அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாக தான் முடிவெடுத்தேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.