சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் சென்னை உள்படவட மாவட்டங்களை ஃபெங்கல் புயல் புரட்டி எடுத்த நிலையில், தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடலில் இன்று உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் டிச.10-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் புதன் மற்றும் வியாழக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியிலும் அடுத்த வாரம் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதே சமயம், சென்னையின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.