சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சசிகலா மற்போது அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட அதிகாரிகளையும் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அவருக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. நள்ளிரவில் அங்கு வந்த ஒரு கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளி, ஓம் பஹதூர் என்பவரை கொலை செய்துவிட்டு, அங்குள்ள பங்களாவுக்குள் புகுந்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அருகே உள்ள சோலுர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வழக்ககை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெட்றறு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் மற்றும் காவல்துறையின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதிக்கோரி னுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தனர். அதில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி சம்பந்தமில்லாமல் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே, எதிர் தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று (டிசம்பர் 6ந்தேதி) தீர்ப்பளித்த நீதிபதி கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அப்போதைய ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட வழக்கு தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் எதிர் தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், தவறான கருத்துகளை கூறியிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையிலும், புலன் விசாரணையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், உள்நோக்கத்துடன் மேத்யூ சாமுவேல் வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தேவையில்லாத விஷயங்களை தெரிவித்துள்ளதாகவும் அது மேலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பதில் மனுவை பரிசீலித்த நீதிபதி, பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்கி புதிய மனுவை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தார். பின்னர், பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப் பெறுவது தொடர்பாக மேத்யூ சாமுவேல் கருத்தை பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.