சென்னை: ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள  பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை தருகிறது.  இந்த குழு தமிழ்நாட்டில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு 8ந்தேதி புதுச்சேரி செல்கிறது.

  மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழு இன்று சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழுவில் மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த  குழு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடவுள்ளனர்

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக  வட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முன்அறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.  தென்பெண்ணைஆற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலமும் இடிந்து தண்ணீரோடு தண்ணீராக கலந்தது.மேலும் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மழை பாதித்த பகுதிகளில் பல்வேறு கட்சியினரும் நிவாரணப் பொருள்களை அளித்து வருகின்றனர். மழை பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி சேற்றை அள்ளிவீசிய சம்பவங்களும்ம்,  பேனர்கள் கிழித்து எரியப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

இந்த நிலையில்,  ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.2000 கோடி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தை திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு விரைகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளது. சென்னை வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திக்கின்றனர். பின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி பகுதிகளை பார்வையிடுகின்றனர்.