வெங்காயம் விலை கண்ணீர் வரவைத்த போதும் நாக்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி வழங்கப்படுகிறது.
பல்வேறு ஊர்களில் உள்ள சாலையோர உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள் மற்றும் அதன் சுவை குறித்து ஆவணப்படுத்தி வரும் ப்ரியா பாலா மற்றும் ஜெயந்த் நாராயணன் எழுதிய புத்தகத்திலிருந்து ‘தி ப்ரிண்ட்’ இதழ் மூலம் இந்த சுவையான தகவல் கிடைத்துள்ளது.
நாக்பூரின் வார்தா சாலையில் உள்ள ‘ராம்ஜி ஷியாம்ஜி போஹாவாலே’ என்ற உணவகத்தில் தான் இதுபோன்று வழங்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு திரிபுவன் நாத் பாண்டே அவர்களால் தொடங்கப்பட்ட இந்த உணவகம் இரட்டையர்களான அவரது மகன்கள் ராம்ஜி மற்றும் ஷியாம்ஜி பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு சாதாரண உணவகத்திற்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அலைமோதுவதைப் பார்க்கும் போது நாக்பூர் வாசிகள் காலை உணவை சமைப்பதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
போஹா என்று சொல்லப்படும் அவல் கொண்டு செய்யப்படும் உணவுக்கு தான் இங்கு அத்தனை பெரிய கூட்டம் கூடுகிறது.
மத்திய பிரதேஷ், பீகார், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அதை ஒட்டியுள்ள அதன் அண்டை மாநிலங்களில் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலை நேர உணவாக இந்த அவல் பலகாரம் இருக்கிறது.
ஊறவைத்த அவலை வடிகட்டி வாணலியில் சிறுது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சிறிது வேர்க்கடலை, வெங்காயம், மஞ்சள் போட்டு அதனுடன் வடிகட்டிய அவலை சேர்த்து இறக்கினால் சுவையான போஹா ரெடி.
அதனுடன் உருளை பட்டாணி காம்பினேஷனில் செய்த ஒருவகை பதார்த்தம் இந்த ராம்ஜி மற்றும் ஷியாம்ஜி உணவகத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் காரம் வேண்டுபவர்கள் சென்னா கிரேவி உள்ளிட்ட சில வகை கிரேவிகளை வாங்கி இந்த அவல் பலகாரத்துடன் சாப்பிடுகிறார்கள்.
ஆனால் இங்கு வரும் பல தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் போஹா உடன் கூடுதலாக அவர்களுக்கு வழங்கப்படும் வெங்காயத்தை சுவைத்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அளவு வெங்காயத்தை மட்டுமே திரும்ப திரும்ப கேட்டு வாங்கினாலும் வாடிக்கையாளர்களே தோலை உரித்து நறுக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் சலிக்காமல் வழங்கி வருகிறார்கள்.
தவிர, அதை நறுக்குவதற்கு கத்தியும் பலகையும் வேறு தருகிறார்கள், உணவக உரிமையாளர்களின் இந்த தாராள மனதை வியந்து வாடிக்கையாளர்களும் ஆனந்த கண்ணீருடன் வெங்காயத்துடன் போஹா-வை சுவைத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அதன் உரிமையாளர்கள் ராம்ஜி மற்றும் ஷியாம்ஜி கூறும்போது, வெங்காயம் விலை கிலோ ரூ. 25க்கு விற்பனையானாலும் சரி கிலோ ரூ. 100க்கு விற்பனையானாலும் அதுபற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை என்று கூறுகிறார்கள்.
ஆனாலும் வாடிக்கையாளர்களையே வெங்காயத்தை உரிக்கச் சொல்வது குறித்து கருத்து கூறிய அவர்கள் இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்படுவதில்லை எங்களது நேரத்தையும் உழைப்பையும் அவர்கள் மிச்சப்படுத்தும் அதே வேளையில் சிறந்த அரிசியில் இருந்து கிடைக்கக்கூடிய அவலை கொண்டு நாங்கள் தரும் தரமான சுவையான உணவுவகைகளே அவர்களை மீண்டும் மீண்டும் வரவைக்கிறது என்று பெருமையாகக் கூறுகின்றனர்.
– நன்றி ‘தி பிரிண்ட்’