சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முதல் மழை பெய்துவரும்நிலையில்,  கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னை அருகே இன்று பிற்பகல் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கிமீ முதல் 90 கி.மீ வேகத்தல் காற்று வீசும் என்றும், அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறையும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்களுக்கான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை அறிவித்து உள்ளது. அதன்படி,

குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mothers) முன்னரே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

தகுந்த மருந்து, மாத்திரைகள், பாம்பு கடி விஷ முறிவு ஊசி (ASV)  மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவற்றை இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது

மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தகுந்த  மருத்துவ நிவாரண முகாம்கள் தேவைப்படின் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்க அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108ஐ தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல்: பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை….