சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுமக்கள் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டிருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, வலுப்பெற்று ஃபெஞ்சல் புயலாக மாறி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்ற பிற்பகல் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவுமுதல் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் இன்று காலை காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த புயல் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் ” ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதுடன், புயல் இன்று கரையை கடந்தாலும் மேலும், அடுத்த 3 நாட்களான நவம்பர் 30, டிசம்பர் 1,2 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது..
வீட்டில் மின் சுவிட்சுகளை ஆன் செய்யும் போது கவனத்துடன் இயக்கவும். ஈரமான கைகளில் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயச்சிக்க வேண்டாம்.
வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
நீரில் நனைந்த பேன், லைட் உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
மின்மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது.
வீட்டில் மின்சாரம் இல்லை என்றால், அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்சுகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
மின் கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டு உள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், மின்சாரம் தொடர்பான, வாடிக்கையாளர்களின் தேவைகள், புகார்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று மின்துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இப்போது மழைக்காலம் என்பதால், அனைத்து அதிகாரிகளும் தங்களின் செல்போனை எந்த காரணம் கொண்டும், ஆப் செய்து வைக்கக்கூடாது என்றும் இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.