சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று  3வது முறையாக  மீண்டும் மணல் குவாரி காண்டிராக்டர் திண்டுக்கல் ரத்தினம் வீடு உள்பட பல பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  இன்று தொழில் அதிபரான, திண்டுக்கல் ரத்தினத்துக்கு சொந்தமான  புதுக்கோட்டை மற்றும்  திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரத்தினம். ஆனால் அவரை எல்லோரும் அழைப்பது திண்டுக்கல் ரத்தினம், சாதாரண சர்வேயராக சைக்கிளில் வலம் வந்த இவர், இன்று ஜாகுவார் முதல் பிஎம்டபிள்யூ கார் வரை  வைக்கும் அளவுக்கு பணபலமும், ஆள் பலமும் கொண்டவர்.

சர்வேயராக இருந்த அவர் அந்த வேலையை உதறிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவாக்கம் செய்து கொண்டவர் தொடர்ந்து மணல் குவாரி தொழிலில் கால் பதித்தார்.  இவர் மணல்குவாரி ஏலம் எடுப்பது உள்பட பல்வேறு அரசு காண்டிராக்ட்களை எடுத்து கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். இவரது திடீர் வளர்ச்சிக்கு அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், பிரபல தொழிலபதிரான சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது சேகர் ரெட்டி ஆன்மிக பணியில் இறங்கிவிட்டதால், அவர் விட்ட இடத்தை தற்போது திண்டுக்கல் ரத்தினம் பிடித்து  தொழில் செய்து வருகிறார்.

இவர்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மணல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக முறைகேடாக மண் அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குவாரிகளில் சோதனை நடத்தியதுடன், திண்டுக்கல் ரத்தினம் உட்பட மணல்குவாரிகளை ஏலம் எடுத்த சில  தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு முறை சோதனை செய்தனர். 12.09.23 அன்று ரத்தினம் வீடு மற்றும் அலுவலகம் மற்றும் ரத்தினத்தின் மைத்துனர் ஹனிபா நகரில் உள்ள கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது. 2வது முறையாக 25.11.23 ஜிடிஎன் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீட்டில் சென்னை மற்றும் கோவையிலிருந்து வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 3 மணி நேர சோதனை செய்தனர்.

இதற்கிடையில் அமலாக்கத்துறை தொடர்ந்து,  சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில் தொழிலதிபர்கள் மீது மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது சட்டவிரோதம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம்   விமர்சித்துள்ளது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதற்கிடையில், மணல்குவாரி வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக, உச்சநீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் ( நவ.27) விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நீதிபதிகள் அரசை கடுமையாக சாடியிருந்தனர்.

இந்த நிலையில்,  அமலாக்கத்துறை  அதிகாரிகள்  இன்று மூன்றாவது முறையாக திடீரென திண்டுக்கல் ரத்தனத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில்  சோதனை நடத்தி வருகின்ற னர். குறிப்பாக ஜிடிஎன் சாலையில் உள்ள தரணி குழும அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் கோவையிலிருந்து வந்த அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், சோதனை காரணமாக, அந்த பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.