ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த மற்ற நாடுகளுக்கு ஒரு தரநிலையை அமைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோனி அல்பனீஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது இன்று (நவம்பர் 28) இரவு முழுவதும் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பின் இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கீழ் சபையில் நேற்று இந்த சட்டம் நிறைவேறியதை அடுத்து எதிர்கட்சியினரின் ஆதரவுடன் இன்று மேலவையில் நிறைவேறியது.

2025 நவம்பர் மாதம் அமலுக்கு வரவுள்ள இந்த சட்டம், உலகின் கடினமான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை அமைக்கிறது மற்றும் வயது சரிபார்ப்பு பாதுகாப்புகள் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுக்க தளங்களை கட்டாயப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பயோமெட்ரிக் உள்ளிட்ட அரசு தரவுகளைக் கொண்டு வயது சரிபார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் முடிவடைந்த பின் இதுகுறித்து மதிப்பீடு செய்யப்படும் என்றும் இந்த சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு A$49.5 மில்லியன் (ரூ. 271 கோடி) வரை அபராதம் விதிக்கப்படலாம்.