சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு தேவையான நியாயமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.
முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இதற்கான ரூ.15,355.78 கோடியில் மத்திய அரசு ரூ.986.78 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் டோகன்சாகு தனது எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ரூ.85,395 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் சென்னை மெட்ரோ கட்டம் -1 விரிவாக்கம் உட்பட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.15,355.78 கோடி முழுவதையும் விடுவித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் டோகன்சாகு பதில் அளித்துள்ளார்.
ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.986.78 கோடி என்று அவரது எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது! இதில் எந்த எண்ணிக்கை சரியானது மாண்புமிகு அமைச்சர் அவர்களே?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தது குறித்தோ அல்லது பெரும் பற்றாக்குறைத் தொகை தமிழக அரசுக்கு எப்போது ஈடு செய்யப்படும் என்பது குறித்து மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்: தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை!” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.