டெல்லி: மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரயில்வே அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 26 ) நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றி னார். இதைத்தொடர்ந்து, அவை நடைபெற்றது,
மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோர் அதிவேக ரயில் குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதிலில் , சென்னையிலுள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி, பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து, மணிக்கு 280 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்படும் அதிவேக ரயில் பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, ரயில்வே துறை அதிவேக ரயில்களை தயாரித்து வருகிறது.
இந்த ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎப், பிஇஎம்எல் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்து வருகிறது.
இது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு ரயில் தயாரிக்க சுமார் ரூ.28 கோடி (வரி தவிர) செலவாகும். இருக்கை வசதிகளை மட்டுமே கொண்ட இந்த ரயில் பெட்டிகளில் ஏரோடைனமிக் வெளிப்புறம், தானியங்கி கதவுகள், சிசிடிவி, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கும்.
இந்த ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.