கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகளுக்கு மாறாக சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் விளக்கமளித்துள்ளது.

அதானி குழும நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அதானி நிறுவன இயக்குனர்களான கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின் உள்ளிட்ட 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1. பங்கு மற்றும் உத்தரவாத பத்திர மோசடி செய்தது,

2. பத்திர மோசடிக்கு சதித்திட்டம் தீட்டியது,

3. வங்கி பணபரிமாற்ற மோசடி குறித்து சதித்திட்டம் தீட்டியது,

4. அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் FCPA ஐ மீறுவதற்கான சதி மற்றும்

5. நீதி வழங்குவதில் தடை உண்டாக்குதல்

உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின் தவிர, ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் வெளியானதை அடுத்து அதானியின் பங்குகள் சரிவை சந்தித்ததோடு கவுதம் அதானியை கைது செய்ய வேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு அமளி ஆன நிலையில் ஒரு வாரம் கழித்து அதானி நிறுவனம் சார்பில் இந்த வழக்கு குறித்து இன்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், அதானி நிறுவன இயக்குனர்களான, கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் FCPA ஐ மீறுவதற்கான சதி மற்றும் நீதி வழங்குவதில் தடை உண்டாக்குதல் ஆகிய இரண்டு குற்றங்கள் பதிவு செய்யப்பட வில்லை என்று கூறியுள்ளது.

இதையடுத்து, அதானி நிறுவன இயக்குனர்கள் மீது பங்கு மற்றும் உத்தரவாத பத்திர மோசடி செய்தது, பத்திர மோசடிக்கு சதித்திட்டம் தீட்டியது மற்றும் வங்கி பணபரிமாற்ற மோசடி குறித்து சதித்திட்டம் தீட்டியது ஆகிய மூன்று குற்றங்கள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

தவிர, ரஞ்சித் குப்தா, சிரில் கபெனிஸ், சவுரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா மற்றும் ரூபேஷ் அகர்வால் ஆகிய ஐந்து பேர் மீது தான் இந்த 5 குற்றப்பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது.

சூரிய மின்சார ஒப்பந்தம் : அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அதானி மீது வழக்கு… நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட்…