திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் பகுதியில் உள்ள முக்கிய சாலை பகுதியில், சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது அந்த வழியாக வந்த லாரி ஏறியதில் தமிழர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் கவலைக்கிடமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா – தமிழ்நாடு எல்லை அருகே உள்ள பாலக்காடு கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் மற்றும் சிலருடன் சேர்ந்து திருச்சூர் பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தார். அவர்கள் நாட்டிகா என்ற இடத்தில் இரவு சாலையோரம் தூங்கி வந்தனர். வழக்கம்போல நேற்று இரவும் அவர்கள் ஒரு கும்பலாக சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் அங்கு படுத்திருந்தனர். அந்த பகுதியில் சாலை பணி நடப்பதால் வாகனங்கள் வராது என்ற நம்பிக்கையில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததனர்.
இந்த நிலையில் , இன்று அதிகாலை 4 மணி அளவில் எதிர்புற சாலை வழியாக விறகுகளை ஏற்றி வந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை உடைத்து தள்ளிவிட்டு, எதிர்புறம் உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீறி ஏறி இறங்கியது.
தூக்கத்தில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரிவதற்கு முன்பாக பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்தவர்கள் பலர் அலறினர். இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அங்காங்கே சிதறி கிடந்தனர். சாலை முழுவதும் ரத்த ஆறாக ஓடியது. இதை பார்த்த லாரி டிரைவர் உடினயாக வண்டியை நிறுத்தினார்.
காயமடைந்தவர்களின் ஓலம் கேட்டு, அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது சாலை முழுவதும் மனித உடல்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்களை போலீசாரும், பகுதி மக்களும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி விட்டனர். மேலும் 11 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கொடுங்கல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக லாரி டிரைவர் கண்ணூர் அலெக்ஸ் (33), கிளீனர் ஜோஸ் (54) ஆகியோரை கைது செய்தனர். விபத்துக்கு காரணம் டிரைவர் தூங்கியதா? அல்லது மதுபோதையில் வந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.