சென்னை; சுவாமி அய்யப்பன் குறித்து அவதூறாக பாடிய கானா பாடகி இசைவாணி மீது ஏற்கனவே சிவசேனா உள்பட பல இந்து அமைப்புகள் புகார் கொடுத்துள்ள நிலையில், இந்து மக்கள் கட்சியும் புகார் அளித்துள்ளது. இதன் காரணமாக இசைவாணியை காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பிரபல கானா பாடகி இசைவாணி. இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டு மயிலாப்பூரில் ”I am sorry ayyappa” என்ற பாடலை பாடினார். மேலும் இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார். இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையுமாகி எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.
இப்பாடலை பாடிய கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில மகளிரணி தலைவி சுசிலாதேவி தலைமையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், “இந்தியாவில் பல கோடி மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி குறித்தும், மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த பாடல் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் கலாச்சார மையம் நடத்திய நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி பாடியுள்ளார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனங்களை புண்படுத் தும் வகையில் மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாடல் வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரத்தையும் உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக சிவசேனாவும், பல இந்து அமைப்புகளும் இசைவாணி மீது புகார்கள் கொடுத்துள்ளன. இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக இசைவாணி தரப்பிலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,
அதில், , தான் கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடிவருவதாக கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘I am sorry ayyappa’ பாடல்களை பாடியதாகவும், சமூக வலைதளங்களில் அந்த பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.