2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பீகாரில் உள்ள சமஸ்திபூர் என்ற சிறிய கிராமத்தில் 2011 மார்ச் 27ம் தேதி பிறந்தவரான வைபவ் சூர்யவன்ஷி 13 வயதில் ஐபிஎல் அணியில் இடம்பிடித்த இளம்வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

30 லட்ச ரூபாய் ஆரம்ப ஏல தொகை நிர்ணயிக்கப்பட்ட இவரை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

12 வயது 284 நாட்களில் கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர், முதல் தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இடம்பெற்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை யுவராஜ் சிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வைத்திருந்தனர்.

4 வயதில் தனது தந்தை சஞ்சீவுடன் கிரிக்கெட் விளையாட துவங்கிய வைபவ் 9 வயதில் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறையாக பயிற்சி பெற துவங்கினார்.

ரஞ்சி போட்டிகளில் குறிப்பிடத்தக்க சாதனை எதையும் ஏற்படுத்தவில்லை என்றபோதும் 12 வயதில் வினூ மன்கட் கோப்பைக்கான போட்டியில் 5 போட்டிகளில் 400 ரன்கள் எடுத்து பீகார் அணியின் நட்சத்திர வீரராக முன்னேறினார்.

தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷ.,

ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அபார சதம் அடித்து அசத்தி இருந்தார்.

இடதுகை பேட்ஸ்மேனான வைபவ் 58 பந்துகளில் சதம் அடித்து இந்தியாவுக்காக இளையோர் டெஸ்டில் அதிவேக சதம் மற்றும் உலகின் இரண்டாவது அதிவேக சதம் அடித்த பெருமையைப் பெற்றார்.

2025 ஐ.பி.எல். போட்டிகளில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி 2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது 14வது வயதில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.