சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று முற்பகல் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10மணி வரை கடலூர், மயிலாடு துறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முற்பகல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரங்களில் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 900 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வட-வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நேற்றிரவு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. டெல்டாவில் கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.